நவீன தீண்டாமை

நவீன தீண்டாமை

blog image

Image credits Alex-Prosser

அவனை தொட்டால் தீட்டு, இவனை பார்த்தால் தீட்டு என்று சொன்ன காலம் மலையேறி விட்டதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இவ்வகை தீண்டாமை அனைத்தும் வெவேறு ரூபத்தில் இன்றும் தாண்டவம் ஆடி கொண்டு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ரோஹித் வெமுலா, சரவணன் மற்றும் முத்து கிருஷ்ணன் போன்றோரின் மரணம் அமைந்துள்ளது. பார்ப்பனிய ஆதிக்கம், ஜாதிய ஒடுக்கு முறையினால் தோளில் சீலை அணிவது, தூய்மையான நீரை பருகுவது, அனைவரும் செல்லும் பாதையை பயன் படுத்துவது போன்ற அடிப்படை உரிமைகளுக்குக் கூட போராடவேண்டி இருந்தது. இந்த நிலை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாறவில்லை என்பதை எண்ணும் பொது, பகுத்தறியும் முற்போக்கான எந்த ஒரு மனிதருக்கும் இந்திய அரசியல் அமைப்பு, அதன் செயல்பாடு, அதன் திட்டங்கள் மீது கோபம் வருவதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

கல்வி

அன்றைய குல கல்வி முறையில் ஆரம்பித்து இன்றைய மெக்காலே கல்வி முறை வரை எதுவும் மாறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. கூர்மையாக உற்று நோக்கினால், சமீப காலமாக, இந்த நிலை இன்னும் மோசமாகி வருகிறது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இட ஒதுக்கீடை எதிர்க்கும் மனோபாவத்தை பாமரர்களிடம் திட்டமிட்டு தினிக்கின்றது இந்த பார்ப்பனிய, முதலாளித்துவ அரசும், கைக்கூலி ஊடகங்களும். உயர் ஜாதியினரைத் தவிர வேறு யாரும் கல்வி பயில முடியாத நிலையில் இருந்து தாழ்த்த பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கல்வி பயில ஆரம்பித்ததை பொறுத்து கொள்ள முடியாத இந்த ஜனநாயக முகமூடி அணிந்த அரசும், அதிகாரிகளும், ஏன் பாடத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் கூட இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவு படுத்துவது மட்டும் அல்லாமல் வாய்ப்பு கிடைத்தால் அவர்களை கொன்றும் குவிக்கிறார்கள். அன்று தூரத்தில் இருந்து வில் விதையை கற்று கொண்ட ஏகலைவனின் கட்டை விரல் துண்டிக்கப் பட்டது இன்று உரிமையோடு உயர் கல்வி நிறுவனங்களில் பாடம் பயிலும் முத்து கிருஷ்ணன்களின் உயிர் பறிக்க படுகின்றது.

சமூகம்

இவ்வித இன்னல்கள் கல்வி நிலையங்களை கடந்த உடன் முடிந்து விடும் என்று கற்பனையில் கூட எண்ண முடியவில்லை. பல இன்னல்களை கடந்து சாதிக்கும் தருணத்திலும் அதன் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் ” இவன் இட ஒதுக்கீட்டில படிச்சவன் தானே? ” என்ற ஏளனமான கேள்வியை இந்த சமூகம் அவர்களை பார்த்து கேட்கின்றது. இப்பொழுது ஜாதி பார்ப்பதில்லை, எல்லோரும் முன்னேறி விட்டார்கள் என்று வாதிடும் மூடர்கள் எந்த உயர் ஜாதியினரும் சாக்கடை அள்ளுவதில்லை என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களது கழிவையே அகற்ற முகம் சுளிக்கும் இவர்கள், சொகுசு வாழ்வு வாழ்வதற்கு ஜாதிய இட ஒதிக்கீடை தடுக்க திட்டமிட்டு கொண்டு இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் சர் நேம் என்ற பெயரில் ஜாதி பெயரை இணைத்து கொள்வதும், அதன் மூலம் வேலையில் அமர்வதும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இட ஒதுக்கீடை எதிர்க்கும் இந்த உத்தமர்கள் யாரும் ஜாதியை எதிர்ப்பது இல்லை. ஆதிக்கச் சாதியினரின் நலனுக்கான இந்த சமூகம் என்னும் சதுரங்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு செக் வைத்து கொண்டே இருக்கிறது ஆனால் அதையும் தாண்டி இவர்கள் மகுடம் சூடி கொண்டே இருக்கிறார்கள்.

 

12 thoughts on “நவீன தீண்டாமை

  1. நெஞ்சில் நஞ்சை வைத்துகொண்டு பணத்தின் போதையால் பஞ்சணையில் பகட்டாய் வாழும் ஞாதி வெறியர்களுக்கான சவுக்கடி பதிவு…

    வாழ்த்துக்கள்.

    Like

Leave a comment